முட்டை ஓடு தரம் குறைவதை தடுப்பது எப்படி?
நாமக்கல் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், முட்டைஓடு தரம் குறைவதை தடுப்பது எப்படி? என்பது குறித்தும் வானிலை ஆராய்ச்சி நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், முட்டைஓடு தரம் குறைவதை தடுப்பது எப்படி? என்பது குறித்தும் வானிலை ஆராய்ச்சி நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 6 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை, நாளைமறுநாள் மழைக்கு வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.
முட்டைஓடு தரம் குறைய வாய்ப்பு
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள காரணத்தால், மாவட்டத்தின் அநேக இடங்களில் மேகமூட்டமும், இடியுடன் கூடிய லேசான மழையும் காணப்படும். இதனால் கோழிகளில் தீவன எடுப்பு இயல்பான நிலையை அடைய வாய்ப்பு உள்ளது. முட்டை உற்பத்தியும் இயல்பை அடைய தொடங்கும். இருப்பினும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், முட்டைஓடு தரம் குறைய வாய்ப்பு உள்ளது.
இதை தவிர்க்க கோழித்தீவனத்தில் தொடர்ந்து சோடா உப்பு டன்னிற்கு 2 கிலோ வரை சேர்த்து வர வேண்டும். இதுமட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் இருந்து வரும் மக்காச்சோளம் மற்றும் இதர தானியங்களில் மழை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அப்ளா என்ற நச்சு அதிகமாக காணப்படும். எனவே ஆய்வக பரிசோதனை செய்தும், கொள்முதலில் தரக்கட்டுப்பாடு செய்தும் தானியங்களை உபயோகப்படுத்த வேண்டும். இதனால் பூஞ்சான நச்சு காரணமாக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைபாட்டை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story