நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆய்வகத்துக்கு நோட்டீசு


நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆய்வகத்துக்கு நோட்டீசு
x
தினத்தந்தி 9 Jun 2021 12:31 AM IST (Updated: 9 Jun 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15 தனியார் ஆய்வகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15 தனியார் ஆய்வகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை அளித்துவருகின்றனர்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகம் என 5 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.
குற்றச்சாட்டு
இந்த நிலையில் மாவட்டத்தில் சில தனியார் ஆய்வகம் மற்றும் மருத்துவமனைகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி பெறாமல், கொரோனா பரிசோதனை செய்து சேலம், கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி முடிவுகளை சேகரிப்பதாகவும், அவற்றை முறையாக சுகாதாரத்துறைக்கு தெரிவிப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் கொரோனா நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அந்த ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.
15 ஆய்வகத்துக்கு நோட்டீசு
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி பெறாமல் மாவட்டத்தில் சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்து முடிவுகளை அறிவிப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து, உரிய அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்யக்கூடாது என 15-க்கும் மேற்பட்ட தனியார் ஆய்வகத்துக்கு நோட்டீசு அனுப்பி உள்ளோம். தொடர்ந்து அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்தால் பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story