இறால் வலைகளை சேதப்படுத்தும் பேகா நண்டுகள்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இறால்வலைகளை பேகா நண்டுகள் சேதப்படுத்துவதால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இறால்வலைகளை பேகா நண்டுகள் சேதப்படுத்துவதால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
மீன்பிடி தொழில்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு, கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரைதெரு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் நாட்டு படகுகள் மூலம் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள். சிலர் இறால் மற்றும் நண்டுகளை பிடிக்க கடலுக்கு சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்ததை அடுத்து அதிராம்பட்டினம் பெரிய மார்க்கெட் மற்றும் சிறிய மார்க்கெட் ஆகியவற்றில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது.
பேகா நண்டுகள்
இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அரசு தளர்வுடன் கூடிய ஊரடங்கை அறிவித்ததை தொடர்ந்து மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் இறால் பிடிக்கும் மீனவர்கள் வலையில் பேகா நண்டுகள் அதிக அளவு சிக்கி மீனவர்களின் வலையை சேதப்படுத்துகின்றன. இதனால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
வலை சேதம்
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:-
ஊரடங்கு தடைக்கு பின் தற்போது மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகிறோம். அதிராம்பட்டினம் சேற்று பகுதி கடல் என்பதால் பேகா நண்டு கடலுக்கு அடியில் சேற்றுப் பகுதியில் பொந்தில் வாழும் தன்மை கொண்டது. இது தற்போது கடற்பகுதியில் சோலா காற்று வீசி வருவதால் சேற்று பகுதியிலிருந்து மேல் நோக்கி வரும் இவ்வகையான நண்டு இறால் பிடிக்கும் வலையை கடித்து விடுவதோடு வலையில் சிக்கிக் கொண்டு வலையை அறுத்து துண்டாக்கி விடுகிறது.
பயன் இல்லை
இதன்பின் இறாலுக்கு விரித்த வலையை எடுத்துக்கொண்டு கரையை திரும்பிய பிறகு தரம் பிரிக்கும் போது வலையில் சிக்கிய பேகா நண்டை அகற்றும் பொழுது மீனவர்களின் விரல்களை கடித்து விடுகிறது. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. இந்த பேகா நண்டு எதற்கும் உதவாத நண்டாகும். இதை கடற்கரையோரப் பகுதியில் கொட்டி விடுவோம். இதை சிலர் வெயிலில் உலரவைத்து கோழி தீவனத்திற்கு நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
எங்களுக்கு இந்த நண்டால் எந்த பயனும் இல்லை. ஒருபுறம் இறால் சிக்கினாலும் மறுபுறம் பேகா நண்டால் வலை சேதமடைந்து வருகிறது. இதனால் அதிக செலவு ஏற்படுகிறது.
இவ்வாறு மீனவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story