கணவன்-மனைவியை கொன்று 20 பவுன் நகைகள் கொள்ளை


கணவன்-மனைவியை கொன்று 20 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 9 Jun 2021 2:15 AM IST (Updated: 9 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே வீட்டில் கணவன்-மனைவியை கொலை செய்து 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குன்னம்:

தம்பதி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 62). விவசாயி. இவரது முதல் மனைவி ஜோதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ேஜாதி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பெரியசாமி, அறிவழகி (48) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு முருகானந்தம் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.
இதில் முருகானந்தம் சென்னையில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சத்யாவுக்கு திருமணமாகி குன்னம் அருகே உள்ள தேனூரில் வசித்து வருகிறார். அவருடைய கணவர் வெங்கடேசன், குன்னம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பெரியசாமியின் முதல் மனைவி பிள்ளைகள் தனியாக வசித்து வருகின்றனர்.
தனியாக வசித்தனர்
இதனால் பெரம்பலூர்-அரியலூர் மெயின்ரோட்டில் உள்ள வீட்டில் பெரியசாமியும், அறிவழகியும் தனியாக வசித்து வந்தனர். தற்போது உடல்நலம் சரியில்லாமல் பெரியசாமி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை முருகானந்தம், சென்னையில் இருந்து பெரியசாமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து போன் செய்தும், பெரியசாமி எடுக்காததால் சந்தேகமடைந்த முருகானந்தம், நேற்று மாலை தனது சித்தப்பாவான லெட்சுமணனுக்கு போன் செய்து, வீட்டிற்கு சென்று பெரியசாமியிடம் போனை கொடுத்து பேசச்சொல்லுமாறு, கூறியுள்ளார்.
பிணமாக கிடந்தனர்
அதன்படி அவரும், தனது அண்ணன் பெரியசாமியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த லெட்சுமணன், கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது பெரியசாமி படுக்கை அறையிலும், அறிவழகி முன்பக்க அறையிலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கொலை- கொள்ளை
இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்தர், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது பெரியசாமி தலையில் தாக்கப்பட்டும், அறிவழகி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்ததும், அறிவழகியை சற்று தூரம் இழுத்து போட்டது போன்ற ரத்தக்கறை படிந்திருந்ததும், தெரியவந்தது.
மேலும் வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் கீழே சிதறி கிடந்தன. இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அறிவழகியின் கழுத்தில் கிடந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 20 பவுன் நகைகள் மற்றும் டி.வி., செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் நகைக்காக திட்டமிட்டு தம்பதியை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம், என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து பெரியசாமி, அறிவழகி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் அரியலூர் மெயின்ரோட்டில் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடய அறிவியல் நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்தனர்.
அல்லிநகரம் கிராமத்தில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story