மது பதுக்கி வைத்தவர் கைது
வாடகைக்கு வீடு எடுத்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 720 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வத்திராயிருப்பு,
வாடகைக்கு வீடு எடுத்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 720 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மதுபானக்கடைகள் மூடல்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆதலால் தற்போது மதுபாட்டில்கள் பதுக்கி வைப்பது விற்பனை செய்வதும், சாராயம் காய்ச்சுவதும் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் வத்திராயிருப்பு தெற்கு தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.
வாடகை வீடு
இதையடுத்து வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சுபக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பெட்டிகளுடன் 2 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் போலீசார் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் சுந்தரபாண்டியத்தை சேர்ந்த கணேசன் (வயது 39) என்பதும், வீட்டை வாடகைக்கு எடுத்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்ததும் தெரியவந்தது.
720 மதுபாட்டில்கள் பறிமுதல்
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அங்கிருந்த 720 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story