கொரோனா நோயாளிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் ஸ்டிரெச்சர்


கொரோனா நோயாளிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் ஸ்டிரெச்சர்
x
தினத்தந்தி 9 Jun 2021 9:17 PM IST (Updated: 9 Jun 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் ஸ்டிரெச்சர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் ஸ்டிரெச்சர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சிகிச்சை

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நாள்தோறும் ஏராளமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு முதலில் கொரோனா பரிசோதனை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
ஆக்சிஜன் அளவு குறைவான நோயாளிகளுக்கு அதற்கான படுக்கை வசதி உள்ள வார்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அனுமதிக்கப்படும் நோயாளிகளில் சிலருக்கு அதிக மூச்சுத் திணறல் ஏற்படும்போது அவர்களின் நுரையீரலில் கொரோனா கிருமியின் பாதிப்பு, நுரையீரல் செயல்பாடு குறித்து துல்லியமாக கண்டறிய சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை அதனை கழற்றி விட்டு ஸ்டிரெச்சரில் வைத்து சி.டி. ஸ்கேன் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் அதிகமாகி பெரும் அவதி அடைந்து வந்தனர். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தால்தான் அதற்குரிய அளவில் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் இது தவிர்க்க முடியாததாக இருந்து வந்தது.

கோரிக்கை

இதற்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தும் வசதியுடன் கூடிய ஸ்டிரெச்சர் வசதி  ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கொண்டு சென்றனர். 
இதனை தொடர்ந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உடனடியாக மதுரையில் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திக்கொண்டு செல்லும் வசதியுடன் கூடிய ஸ்டிரெச்சர் வரவழைத்து வழங்கி உள்ளார். இதன்மூலம் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் சிரமமின்றி சி.டி. ஸ்கேன் எடுக்க செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை மூச்சுதிணறல் பாதிப்பின்றி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு நோயாளிகளின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story