வழிமேல் விழி வைத்து தடுப்பூசிக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசிக்காக பொதுமக்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல்:
கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
அதன்பிறகு உயிரிழப்பை கட்டுப்படுத்தும் அயுதமாக தடுப்பூசி திகழ்வது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் தடுப்பூசி போடுகிற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைேமாதுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை, கமலா நேரு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை.
பொதுமக்கள் காத்திருப்பு
தடுப்பூசி போடுவதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்படுகிறது.
அதன் பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தடுப்பூசி, அனைத்து தரப்பினருக்கு போடும் வகையில் தேவையான எண்ணிக்கையில் கொண்டுவரப்படுமா? அல்லது மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் வகையில் குறைந்த எண்ணிக்கையில் கொண்டுவரப்படுமா? என்ற கலக்கத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
மேலும் அவ்வாறு கொண்டுவரப்படும் தடுப்பூசிகள் தங்களுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வழிமேல் விழி வைத்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
---------
Related Tags :
Next Story