நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து 50 கிரைண்டர்கள் எரிந்து நாசம்; 200 மோட்டார் சைக்கிள்கள் தப்பின
நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்தில் 50 கிைரண்டர்கள் எரிந்து நாசமானது. 200 மோட்டார் சைக்கிள்கள் தப்பின.
நாகப்பட்டினம்:-
நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்தில் 50 கிைரண்டர்கள் எரிந்து நாசமானது. 200 மோட்டார் சைக்கிள்கள் தப்பின.
போலீஸ் நிலையம்
நாகை-நாகூர் மெயின் ரோட்டில் காடம்பாடி பகுதியில் வெளிப்பாளையம் போலீஸ் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மோப்ப நாய் பிரிவு, ஆயுதப்படை போலீஸ் அலுவலகம் ஏற்கனவே செயல்பட்டு வந்தது. இதில் ஆயுதப்படைக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதை அடுத்து ஆயுதப்படை அலுவலகம் அங்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டது.
நாகை புதிய பஸ் நிலையம் அருகே வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளிப்பாளையம் போலீஸ் நிலையம் காடம்பாடி பகுதியிலேயே தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
தீப்பிடித்து எரிந்தது
இந்த வளாகத்தில் போலீஸ் நிலைய அலுவலகம் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் உள்ள மற்றொரு அறையில் அரசு திட்டத்தின் கீழ் வினியோகிப்பதற்காக விலையில்லா கிைரண்டர்கள் மற்றும் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த அறையில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் புகை வெளியே வந்தது. பின்னர் மள மளவென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.
கிரைண்டர்கள் எரிந்து நாசம்
இந்த தீ விபத்தில் அந்த அறைக்குள் இருந்த 50-க்கும் மேற்பட்ட கிரைண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என 200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், மோட்டார் சைக்கிள்கள் தீயில் இருந்து தப்பின.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
போலீஸ் நிலைய வளாகத்தில் தீ விபத்து நடந்தது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story