குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் திட்டம்: கடலூர் மாவட்டத்துக்கு 17,100 மெட்ரிக் டன் அரிசி வரத்து
குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்காக கடலூர் மாவட்டத்திற்கு 17 ஆயிரத்து100 மெட்ரிக் டன் அரிசி வந்தது.
கடலூர்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசு முன்வந்தது. இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு 8 மாதங்களாக ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கியது.
தற்போது, கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் இந்த திட்டம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.
17,100 மெட்ரிக் டன்
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்திற்கு 17ஆயிரத்து 100 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த அரிசி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து லாரிகள் மூலம் ஏற்றி கடலூர் செம்மண்டலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணி தற்போது நடந்து வருகிறது.
இது பற்றி நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே, ஜூன் மாதம் வழங்க வேண்டிய அரிசியை ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
கோதுமை
இதற்காக 17,100 மெட்ரிக் டன் அரிசி, 800 மெட்ரிக் டன் கோதுமை வந்துள்ளது. குடும்ப அட்டையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தலா 5 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை ரேஷன் கடைகள் மூலம் விரைவில் வழங்கப்படும்.
இதேபோல் தமிழக அரசு அறிவித்த 14 மளிகை பொருட்களும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
Related Tags :
Next Story