தென்னையில் ஊடுபயிராக மிளகு சாகுபடி


தென்னையில் ஊடுபயிராக மிளகு சாகுபடி
x
தினத்தந்தி 9 Jun 2021 5:09 PM GMT (Updated: 9 Jun 2021 5:09 PM GMT)

உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்து விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்து விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
குளிர்ந்த பருவநிலை
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. தென்னையில் ஊடுபயிராக சோளம், மக்காச்சோளம், வாழை, பாக்கு, மல்பெரி, கோகோ மற்றும் காய்கறிப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர். 
அதேநேரத்தில் ஒருசில விவசாயிகள் குளிர்ந்த பருவநிலைகளில் மட்டுமே வளரக் கூடிய மிளகுப் பயிரைத் தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர்.
இதுகுறித்து மிளகு சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-
மசாலாப்பொருட்களின் ராஜா
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து சாப்பிடலாம் என்பது பழமொழியாகும்.மிளகின் விஷ முறிவுத் தன்மையைக் கருத்தில் கொண்டுதான் இந்தப் பழமொழி உருவாகியிருக்க வேண்டும். தமிழர் வீடுகளின் அஞ்சறைப் பெட்டியில் கண்டிப்பாக மிளகுக்கு இடம் உண்டு.
தமிழகத்தின் மிக முக்கிய வாணிபப் பொருளாக மிளகு இருந்துள்ளது. மிளகு இல்லாமல் பாட்டி வைத்தியம் இல்லை என்று சொல்லுமளவுக்கு நமது மூதாதையரின் வாழ்வில் கலந்ததாக மிளகு இருந்துள்ளது. அத்துடன் வெள்ளையர்கள் இந்தியா வந்ததற்கான முக்கிய காரணமாக மிளகு வர்த்தகம் இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. எகிப்தில் மம்மிகளை ஆய்வு செய்த போது அவற்றில் மிளகைப் பயன்படுத்தியதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழர்களின் காரசாரமான சமையலில் எப்போதுமே மிளகுக்கு முக்கிய இடம் உண்டு.
இதனால் தான் மிளகை மசாலாப் பொருட்களின் ராஜா என்று சொல்வார்கள். இதனால் எப்போதுமே மிளகுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
இயற்கை முறை
மைசூர்,குடகு மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் மிளகு சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.நமது ஊரில் ஓரளவு குளிர்ந்த வானிலை நிலவினாலும் மிளகு சாகுபடிக்கு போதுமானதாக இருப்பதில்லை. இதனால் தனிப்பயிராக மிளகு சாகுபடி செய்வதில் சிக்கல் உள்ளது. அதேநேரத்தில் தென்னை, பாக்கு போன்ற மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது ஓரளவு நல்ல மகசூல் கிடைக்கிறது.
அதிலும் தென்னை,பாக்கு மரங்களுக்கு இடையில் கோகோ, வாழை போன்ற பயிர்கள் மற்றும் நிலப்பரப்பில் அன்னாசி என பல அடுக்கு சாகுபடி செய்து குளிர்ச்சியான சூழலை உருவாக்குவதன் மூலம் மிளகு சாகுபடிக்கு உகந்த சூழலை உருவாக்கி சிறந்த மகசூல் பெற முடியும்.பார்ப்பதற்கு வெற்றிலை போன்ற இலைகளுடன் காணப்படும் மிளகும் கொடி வகைப் பயிர் தான்.இதனை தென்னை மரங்களில் படர விடலாம்.நட்ட முதல் வருடத்திலேயே காய்க்கத் தொடங்கினாலும் 3 வது ஆண்டிலிருந்தே அதிக மகசூல் தரும்.மிளகுக்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தினால் விரைவில் காய்ந்து வீணாகி விடுகிறது.இயற்கை முறையில் தொழு உரம்,ஜீவாமிர்தம் மற்றும் அமிர்தக் கரைசலைப் பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும்.மிளகுக் கொடிகள் நீளமாக வளரக் கூடியது என்றாலும் தென்னை மரங்களில் 8 அடிக்கு மேல் படராதவாறு வெட்டி விடுவது நல்லது. இல்லாவிட்டால் அறுவடை செய்வதில் சிரமங்கள் ஏற்படும்.
லாபகரமான பயிர்
மேலும் அடியிலுள்ள கொடிகளை அவ்வப்போது மடித்து மண்ணில் ஊன்றி விடுவதன் மூலம் அதிக கிளைகள் உருவாக்கி அடிப்பகுதியில் அடர்த்தியாகப் படரும். கொத்தாக காய்க்கும் மிளகு காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும் பழுத்த பிறகு சிவப்பு நிறத்திலும் காய்ந்த பிறகு கருப்பு நிறத்திலும் இருக்கும்.மிளகு பழுத்தவுடன் அறுவடை செய்ய முடியாவிட்டாலும் வீணாகாது. நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அறுவடை செய்து கொள்ளலாம். இல்லாவிட்டாலும் காய்ந்து கொத்தாக உதிர்ந்த பின் அதனை சேகரித்துக் கொள்ளலாம்.மிளகில் அதிக அளவில் பூச்சி,நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை.இதனால் லாபகரமான பயிராகவே மிளகு சாகுபடி உள்ளது.
இவ்வாறு விவசாயி கூறினார்.

Next Story