மாவட்ட செய்திகள்

தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா? + "||" + Are workers being taken to work

தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா?

தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா?
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா? என்பதை ஊராட்சி தலைவர்கள் கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
ஊட்டி,

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா? என்பதை ஊராட்சி தலைவர்கள் கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அழகர் மலை, கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர், பாக்யம் நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு கொரோனா பரவலை தடுக்க சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா, காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகிறதா, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளிநபர்கள் வருவதையும், உள்ளே இருந்து விவசாயம் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா என்பதையும் ஊராட்சி தலைவர்கள் கண்காணிக்க வேண்டும். கிருமிநாசினி மூலம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

வீடு வீடாக...

உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து அந்தந்த பகுதிகளில் தினமும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து ஆலோசித்து, அதனை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், ஜிங்க் மாத்திரைகள் தொடர்ந்து வழங்க வேண்டும். வீடு, வீடாக ஆய்வு செய்து இருமல், சளி, காய்ச்சல் உள்பட 13 வகையான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

மளிகை பொருட்கள்

இந்திராநகர் பகுதியில் 30 குடும்பத்தினருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.