மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு


மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு
x
தினத்தந்தி 9 Jun 2021 11:30 PM IST (Updated: 9 Jun 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

மேற்கூரையில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவபிரசன்னம் பார்ப்பதற்காக தந்திரிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மணவாளக்குறிச்சி:
மேற்கூரையில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவபிரசன்னம் பார்ப்பதற்காக தந்திரிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். 
தீவிபத்து
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. 
இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. 
தேவ பிரசன்னம்
தற்காலிக கூரை அமைக்கும் பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோவிலில் அடுத்த வாரம் தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. 
இதற்கான அனுமதியை இந்து அறநிலையத்துறை ஆணையர் அளித்துள்ளதாக கோவில் வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், தேவ பிரசன்னம் பார்ப்பதற்கான நாள் குறிக்கப்படவில்லை. அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் பார்ப்பதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
குலுக்கல் முறையில்...
அதன்படி தேவ பிரசன்னம் பார்ப்பதற்காக 9 கேரளா தந்திரிகளை கோவில் நிர்வாகம் அழைத்துள்ளது. இந்த 9 பேர்களின் பெயரை சீட்டில் எழுதி அம்மன் சன்னதியில் குலுக்கி போட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். குலுக்கல் முறையில் தேர்வாகும் தந்திரியே தேவ பிரசன்னம் பார்ப்பார். தேவ பிரசன்னம் பார்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்படவுள்ளதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story