மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக செஞ்சேரி புத்தூர் கிராமத்திற்கு சீல் + "||" + Sealed to Ginger Puthur village due to increase in corona spread

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக செஞ்சேரி புத்தூர் கிராமத்திற்கு சீல்

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக செஞ்சேரி புத்தூர் கிராமத்திற்கு சீல்
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புத்தூர் கிராமத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
சுல்தான்பேட்டை

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புத்தூர் கிராமத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கிராமத்துக்கு ‘சீல்’

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி புத்தூர் ஊராட்சியில் செஞ்சேரி புத்தூர், சின்னப்புத்தூர், எஸ்.பி.வடுகபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கொரோனா 2-வது அலையில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் செஞ்சேரி புத்தூர் கிராமத்தில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அந்த கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, தடுப்பு வைத்து அடைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர். 

தீவிர கண்காணிப்பு

மேலும் செஞ்சேரி புத்தூர் கிராமத்திற்குள் இருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும், வெளியூரில் இருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க வருவாய் துறை, சுகாதாரத்துறை, ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து ஆலோசனை நடத்தி, பிளிச்சீங் பவுடர் தூவுதல், கிருமிநாசினி தெளித்தல், கபசுர குடிநீர், முககவசம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், செஞ்சேரி புத்தூர் ஊராட்சியில் கொரோனா 2-வது அலையில் மொத்தம் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஊராட்சியில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிப்பு

இதேபோல் ஜே.கிருஷ்ணாபுரம் ஏ.டி.காலனியில் ஒரே வீட்டில் அம்மா, மகன், பேரன், பேத்தி என 4 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து ஏ.டி.காலனி தடுப்பு வைத்து அமைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கொரோனா 2-வது அலையில் 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுகாதார பணிகள்

கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகள் குறித்து சுல்தான்பேட்டை வட்டார ஆனணயாளர் சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.