பொள்ளாச்சி அன்னபூரணி லே-அவுட்டில் தடுப்பு வைத்து அடைத்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு


பொள்ளாச்சி அன்னபூரணி லே-அவுட்டில் தடுப்பு வைத்து அடைத்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 11:41 PM IST (Updated: 9 Jun 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அன்னபூரணி லே-அவுட் தனிமைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தடுப்பு வைத்து அடைத்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அன்னபூரணி லே-அவுட் தனிமைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தடுப்பு வைத்து அடைத்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

பொள்ளாச்சி நகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்டது அன்னபூரணி லே-அவுட். இந்த பகுதியில் 97 வீடுகள் உள்ளன. 329 பேர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அன்னபூரணி லே-அவுட் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் தடுப்புகள் வைத்து அடைத்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வீதியை அடைத்தால் எப்படி மளிகை பொருட்கள், காய்கறிகள் கிடைக்கும். மேலும் கொரோனா நிவாரண பொருட்களை வழங்குவதற்கு டோக்கன் பெற முடியாது. வேலைக்கு செல்ல இயலாது என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாகனங்கள் மூலம் பொருட்கள் விற்பனை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், தாசில்தார் அரசகுமார், நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
அன்னபூரணி லே-அவுட் பகுதியில் 18 பேருக்கு தொற்று பாதித்து உள்ளதால், தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் காலை 8 மணிக்கு வாகனங்கள் மூலம் அந்த பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும். 

மேலும் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு உரிய டோக்கன் வீடு தேடி சென்று வழங்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 123 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story