ஆதிவாசி குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டுங்கள் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவு
ஆதிவாசி குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டுங்கள் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டார்.
வால்பாறை
ஆதிவாசி குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டுங்கள் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டார்.
பள்ளிக்கூடங்களில் அமைச்சர் ஆய்வு
கோவை மாவட்டம் வால்பாறைக்கு நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். பின்னர் அவர் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் கல்வி நிலை குறித்தும், பள்ளிக்கூட கட்டிடங்களின் தரம் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டார். மேலும் பள்ளிக்கூடங்களில் ஆதிவாசி, பழங்குடியின கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் எத்தனை பேர் படிக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறதா? என்றும், உண்டு உறைவிட பள்ளிக்கூடங்களின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது, பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியர் துரைராஜ் வரைந்த ஒவியங்களின் கண்காட்சியையும் பார்வையிட்டு பாராட்டினார்.
அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை
இதனைதொடர்ந்து, அமைச்சர் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளிக்கூடத்தில் அதிக மாணவிகளை சேர்த்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிவாசி பழங்குடியின மாணவிகளுக்கு படிப்பதில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும்.
மேலும் அவர்களுக்கு படிப்பிற்கு தேவையான வசதிகளை ஆசிரியர்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் இருந்த ஆய்வு நோட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் ராபின்சன், சிவன்ராஜ் ஆகியோரிடம் அமைச்சர் பேசினார். அப்போது பள்ளிக்கூடத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக விரிவான அறிக்கை அனுப்புங்கள்.
இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவரது உத்தரவின்பேரில், அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார்.
ஆதிவாசி குழந்தைகள்
மேலும், வால்பாறை பகுதியில் உள்ள ஆதிவாசி, பழங்குடியினர் கிராமங்களை சேர்ந்த குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டுங்கள் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றார்.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், ரொட்டிக்கடை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இன்றும் (வியாழக்கிழமை) வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்போவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Related Tags :
Next Story