கூடலூர், பந்தலூரில் கடைகள் அடைப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கூடலூர், பந்தலூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
கூடலூர்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கூடலூர், பந்தலூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
கொரோனா பரவல் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பாதிப்பு உயர்ந்தது. இதனிடையே முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இதனால் காய்கறி, மளிகை, மீன், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டது. மேலும் மக்கள் நடமாட்டமும் அதிகரித்தது. இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் நிலை காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் இடையே ஆலோசனை கூட்டம், கூடலூரில் நடைபெற்றது. கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைத்து கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 14-ந் தேதி காலை 6 மணி வரை அத்தியாவசிய கடைகள் உள்பட அனைத்து கடைகளையும் அடைப்பதாக வியாபாரிகள் அறிவித்தனர்.
கடைகள் அடைப்பு
அதன்படி கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் மற்றும் மசினகுடி பகுதியில் நேற்று முதல் காய்கறி, மளிகை, மீன், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. கூடலூர் நகரில் கடைகள் திறக்கப்படாததால் மக்கள் நடமாட்டம் இல்லை.
வாகன போக்குவரத்தும் இல்லாததால் சாலைகள், தெருக்கள் வெறிச்சோடியது. ஆனால் வழக்கம்போல் அரசு அலுவலகங்களில் 30 சதவீத பணியாளர்கள் வந்து பணியாற்றினர்.
மேலும் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், ரேஷன் கடைகள் செயல்பட்டது. காய்கறி, மளிகை, மீன், இறைச்சி உள்ளிட்டவை மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு வாகனங்களில் கொண்டு சென்று விற்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story