கார் கவிழ்ந்து தம்பதி பலி
கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தம்பதி பலியாகினர்.
ஊட்டி,
கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தம்பதி பலியாகினர்.
மகளை பார்க்க வந்தபோது நிகழ்ந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பிரேக் பழுது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் பசீர் அகமது (வயது 55). இவருடைய மனைவி ஆசனி பேகம் (51). இவர்களது மகள், நீலகிரி மாவட்டம் மாயார் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மகளை பார்க்க பசீர் அகமது, ஆசனி பேகம் ஆகியோர் ஒரு காரில் ஊட்டிக்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மாயாருக்கு சென்றனர். காரை தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக்(32) ஓட்டினார். 21-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, திடீரென காரின் பிரேக் பழுதானது. தொடர்ந்து டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்து தாறுமாறாக ஓடியது.
சம்பவ இடத்திலேயே...
பின்னர் 22-வது கொண்டை ஊசி வளைவில் சாலையோர தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் உள்பட 3 பேரும், காரில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி மற்றும் வீரர்கள் விரைந்து சென்று, காரில் சிக்கியவர்களை மீட்டனர்.
ஆனால் பசீர் அகமது, ஆசனி பேகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் கார்த்திக்கை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story