கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,281 ஆக உயர்வு


கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,281 ஆக உயர்வு
x
தினத்தந்தி 9 Jun 2021 7:12 PM GMT (Updated: 9 Jun 2021 7:12 PM GMT)

கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,281 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,281 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார். 

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குழப்பம் இல்லை

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துவிட்டது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு நிபுணர் குழு, பரிந்துரைகளை அளிக்க உள்ளது. அதன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். 

கொரோனா பாதிப்பு 5 சதவீதத்திற்கு கீழும், மாநிலத்தில் மொத்தமாக 5 ஆயிரத்திற்கும் கீழும் இருந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை. மராட்டியத்தில் ஏற்கனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கிறார்கள். அந்த மாநிலத்தை விட கர்நாடகத்தில் கொரோனா பரவல் விரைவாக குறைந்து வருகிறது. 

சில நாடுகளில் கொரோனா 3-வது அலை பரவியது. அங்கு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை. வைரஸ் தொற்றுக்கு ஆளான குழந்தைகளும், வீட்டு தனிமையில் இருந்து குணம் அடைந்தனர். அவர்களுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.

கருப்பு பூஞ்சை

ஆயினும் கர்நாடகத்தில் குழந்தைகள் நலன் விஷயத்தில் அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,281 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 102 பேர் குணம் அடைந்துள்ளனர். 

1,948 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சரியான முறையில் பணிக்கு வருவது இல்லை என்று புகார் வந்துள்ளது. 

இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன். இதில் தவறு செய்த டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.

கண்காணிப்பு கேமராக்கள்

டாக்டர்கள் பணியில் இருக்கும்போது 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்றால் அதுகுறித்து தகவல் தெரிவிக்கும் தொழில்நுட்பம் அரசு ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்படும். ஆஸ்பத்திரிகளில் அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story