ராதாபுரம் தாலுகா அலுவலகத்தை வாடகை கார் உரிமையாளர்கள் முற்றுகை


ராதாபுரம் தாலுகா அலுவலகத்தை வாடகை கார் உரிமையாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Jun 2021 7:26 PM GMT (Updated: 9 Jun 2021 7:26 PM GMT)

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தை வாடகை கார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

ராதாபுரம், ஜூன்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் பணிகளுக்காக அரசு அதிகாரிகள், ராதாபுரம் வட்டாரப்பகுதிகளை சேர்ந்த தனியார் வாகனங்களை வாடகை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தினர். தேர்தல் பணியின் போது ஓட்டுப்பதிவு மையங்களுக்கு எந்திரங்கள் மற்றும் அதற்கான உபகரணங்களை கொண்டு செல்வதற்காக தினமும் 37 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. தனியார் வாகனங்களுக்கு தலா ஒரு நாளைக்கு ரூ.3 ஆயிரம் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் முடிந்து 2 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை அவர்களுக்கு வாடகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து வாடகை கார் உரிமையாளர்கள் நேற்று ராதாபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் தாசில்தார் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story