கர்நாடக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய 2 பேர் கைது
பெங்களூருவில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி கர்நாடக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி கர்நாடக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2 பேர் கைது
பெங்களூருவில் உள்ள தொலைபேசி மையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் வேலையில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
அந்த கோணத்தில் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் பெங்களூருவில் உள்ள 6 தொலைபேசி மையங்களில் சோதனை நடத்தினார்கள்.
அந்த 6 மையங்களில் தான் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 6 மையங்களையும் நடத்தி வந்த பி.டி.எம். லே-அவுட்டை சேர்ந்த இப்ராஹிம் (வயது 36), அவரது உதவியாளரான தமிழ்நாடு திருப்பூரை சேர்ந்த கவுதம் (27) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
960 சிம் கார்டுகள்
இவர்களில் இப்ராஹிம் சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். அவர் முதலில் துபாயில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு நிசார் என்பவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர் கூறிய தகவல்களின்படி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து தொலைபேசி மையங்களை தொடங்கி உள்ளார். பின்னர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டதுடன், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி வந்துள்ளார்.
மேலும் மாதம் ரூ.15 லட்சத்திற்கும் மேல் இப்ராஹிம் பணம் சம்பாதித்துள்ளார்.
அவரிடம் இருந்து 32 சிம் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாக்சிலும் 30 சிம் கார்டுகள் இருந்தன. ஒட்டு மொத்தமாக 960 சிம் கார்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிம் கார்டுகளை தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும், உத்தர கன்னடா மாவட்டம் பட்கல்லை சேர்ந்த ஒருவரும் வாங்கி கொடுத்துள்ளனர். இவர்கள் 2 பேரும் கிராமப்புறங்களில் செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்கள் மூலம் இந்த சிம் கார்டுகளை வாங்கி உள்ளனர்.
4 பேர் தலைமறைவு
அதாவது கிராமப்புறங்களில் புதிதாக சிம் கார்டுகள் வாங்க செல்லும் நபர்களிடம், அவர்களது கைவிரல் ரேகை சரியாக பதியவில்லை எனக்கூறி, கடையின் உரிமையாளர்கள் 3 முறை அல்லது 4 முறை கைவிரல் ரேகையை பதிய செய்து, அந்த நபரின் பெயரிலான ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி 3 அல்லது 4 சிம் கார்டுகளை பெற்று 2 பேரிடமும் விற்று வந்துள்ளனர்.
இந்த சிம் கார்டுகளை இப்ராஹிம், கவுதம் வாங்கி, அவற்றை பயன்படுத்தியும், நவீன தொழில் நுட்பத்தின் மூலமாகவும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி இருந்தார்கள்.
தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், பிற தனியார் நிறுவனங்கள், ஏராளமான பொதுமக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், அவர்களது செல்போனுக்கு உள்ளூர் அழைப்புகளாக மாறி செல்லும் வகையில் இப்ராஹிம் ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களிடம் இருந்து ஹவாலா மூலம் அவருக்கு பணம் வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர் உள்பட 4 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த கும்பலை பிடித்த போலீசாருக்கு ரூ.30 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story