மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யக்கோரிசேலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை + "||" + Public siege

கொரோனா தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யக்கோரிசேலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

கொரோனா தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யக்கோரிசேலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கொரோனா தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யக்கோரி சேலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம்:
கொரோனா தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யக்கோரி சேலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு
சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் கடந்த 2 நாட்களாக போடவில்லை. இதனால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து ஏமாற்றம் அடைந்து செல்கிறார்கள். சேலத்தில் குமாரசாமிபட்டி மற்றும் தாதகாப்பட்டி அரசு நகர்ப்புற சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் இந்த ஆரம்ப சுகாதார மையங்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனிடையே, சேலம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 9 நாட்களாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில் சில நாட்கள் மட்டும் மிகக் குறைவான தடுப்பூசிகள் வந்ததாகவும், அப்போது பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு சென்றால் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் முற்றுகை
இந்நிலையில், பள்ளப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர செயலாளர் குரு பிரசன்னா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாநகரச் செயலாளர் பிரவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் பொதுமக்களுக்கு தாமதமின்றி தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடும் விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு எழுதி வைக்க வேண்டும். பள்ளப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறும்போது, ‘பள்ளப்பட்டி பகுதியில் தடுப்பூசிக்கு தகுதியானவர்களாக 55 ஆயிரம் பேர் உள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 50 டோஸ் மட்டும் கொடுப்பது நியாயமில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் தடுப்பூசி தரவேண்டும். பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும்’என்றனர். 
இதைத்தொடர்ந்து தடுப்பூசி விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கொரோனா தடுப்பூசி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.