மாத சம்பளம் இன்றி பணியாற்றும் கோவில் பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை சென்னையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


மாத சம்பளம் இன்றி பணியாற்றும் கோவில் பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை சென்னையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jun 2021 12:12 AM GMT (Updated: 10 Jun 2021 12:12 AM GMT)

கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை சென்னையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி சென்னை மண்டலத்தில் 218 பயனாளிகளுக்கு இந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழா, ராஜா அண்ணாமலைப்புரத்தில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான கபாலீசுவரர் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பூசாரிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு கபாலீசுவரர் கோவில் சார்பாக பிரசாதமும், மாலையும் வழங்கப்பட்டது. முன்னதாக மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் காவேரி வரவேற்றார்.

வரலாற்றில் முதன் முறை

இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, “கொரோனா நோய் பரவல் போன்ற பேரிடர் காலங்களில் இதுபோன்று ஒரே நேரத்தில் இவ்வளவு தொகையும், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியது அறநிலையத்துறை வரலாற்றிலேயே இதுவே முதன் முறையாகும்” என்றார்.

அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் கூறும்போது ,“சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் பணியாற்றும் 14 ஆயிரம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக சென்னையில் 218 பேருக்கு தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. உடல்நிலை சரியில்லாத 13 பேருக்கு வீடுகளிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது” என்றார்.

உதவித்தொகைகளை பெற்றுக் கொண்ட கபாலீசுவரர் கோவில் தலைமை குருக்கள் வேங்கடசுப்பிரமணியன் உள்பட அனைவரும் முதல்-அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story