ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து


ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 10 Jun 2021 6:40 PM IST (Updated: 10 Jun 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

வடமதுரை:

 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 

சென்னை வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திண்டுக்கல் நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தது. 

அந்த லாரியை, சென்னையை அடுத்த மதுரவாயலை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டினார். அவருடன் அண்ணாமலை, விக்னேஷ் ஆகியோர் லாரியில் பயணம் செய்தனர். 

திருச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்கிவிட்டு திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக லாரி சென்று கொண்டிருந்தது.

 லாரி கவிழ்ந்து விபத்து

 திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வடமதுரையை அடுத்த அய்யலூர் மேம்பாலம் அருகே சென்றபோது லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. 

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சிவக்குமார் உள்பட 3 பேர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். 

பின்னர் கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே லாரி கவிழ்ந்ததால், 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story