கொரோனா ஊரடங்கு காலத்தில் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது - ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்


கொரோனா ஊரடங்கு காலத்தில் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது - ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jun 2021 6:48 PM IST (Updated: 10 Jun 2021 6:48 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் நுண் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது, என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நுண் நிதி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கடன் வசூலிப்பதை சில வாரங்கள் ஒத்தி வைக்கும் நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தற்போது கொரோனா ெதாற்று பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கால கட்டத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பாதிக்காத வகையில் தமிழக அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் சுய தொழில் செய்ய பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என நுண் நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வருகிறது.

இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி உள்ள நுண்நிதி வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் தங்கள் களப்பணியாளர்கள் மூலம் கடன் தவணை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.

பேரிடர் காலத்தில் வீடுகளுக்கு சென்று தவணை தொகையை உடனே செலுத்துமாறு நிர்ப்பந்திக்கக்கூடாது. மக்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் பொதுமக்களிடம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கக் கூடாது.

இதை நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பொதுமக்களை சிரமப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு அனைத்து நிதி நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் எஸ்.உமாமகேஸ்வரி, ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் தாமோதரன் (காணொலி காட்சி மூலமாக), திருப்பத்தூர் மாவட்டத்தின் முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story