மகனின் கல்லூரி படிப்பு செலவுக்காக வளர்த்த 2 கன்றுக்குட்டிகளை விற்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி - கலெக்டர் கோவிந்தராவ் பாராட்டு


மகனின் கல்லூரி படிப்பு செலவுக்காக வளர்த்த 2 கன்றுக்குட்டிகளை விற்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி - கலெக்டர் கோவிந்தராவ் பாராட்டு
x
தினத்தந்தி 10 Jun 2021 1:45 PM GMT (Updated: 10 Jun 2021 1:45 PM GMT)

தன் மகனின் கல்லூரி படிப்பு செலவுக்காக வளர்த்து வந்த 2 கன்றுக்குட்டிகளை விற்று பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி, மாவட்ட கலெக்டர் கோவிந்தராவிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது52). இவர் பி.எஸ்சி., பி.எட் படித்து விட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பார்வை மங்கி, பார்வை குறைபாடு ஏற்பட்டதால் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டார்.

இவருடைய மனைவி மகேஸ்வரி (42). இவர்களுக்கு பிரசாந்த் (20), சஞ்சய் (17) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் பிரசாந்த் கல்லூரியில் படித்து வருகிறார். சஞ்சய் பிளஸ்-2 முடித்துள்ளார். தற்போது ரவிச்சந்திரன் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்து வருகிறார். இதன்மூலம் வரக்கூடிய ஊதியம், மாதந்தோறும் கிடைக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,000 என சொற்ப வருமானமே அவரது குடும்பத்துக்கான நிதிஆதாரமாகும்.

கண் பார்வை குறைபாடு ஒரு பக்கம், போதிய வருமானம் இல்லாத நெருக்கடி மறுபக்கம் என தன்னையும், தன் குடும்பத்தையும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்ந்துள்ள நிலையிலும், தன்னை போல் கஷ்டப்படும் மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும், அரசு சார்பில் கிடைக்க கூடிய உதவிகளையும் பெற்று வறியவர்களின் வழி காட்டியாகவே ரவிச்சந்திரன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர், தன் இளைய மகன் சஞ்சய் பிளஸ்-2 முடித்துள்ளதால் அவரை கல்லூரியில் சேர்க்கும்போது தேவையான பணத்திற்காக தான் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு 2 கன்றுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வந்தார். பணம் இல்லாமல் அவனது படிப்பு தடைபட்டு விடக்கூடாது எனபதற்காக முன்னேற்பாடாக 2 கன்றுக்குட்டிகளை வளர்த்து வந்தார்.

இந்தசூழலில் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரவிச்சந்திரனும் நிவாரண நிதி வழங்க முடிவு செய்தார். இதற்காக கொஞ்சமும் யோசிக்காமல் மகனின் படிப்புக்காக வாங்கிய 2 கன்றுக்குட்டிகளையும் விற்று அதன்மூலம் வந்த ரூ.6 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கோவிந்தராவை நேரில் சந்தித்து வழங்கினார். இந்த நிதியை கலெக்டர் பெற்று கொண்டு ரவிச்சந்திரனின் செயலை வெகுவாக பாராட்டினார்.

Next Story