திண்டிவனம் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
திண்டிவனம் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீன் வியாபாரி மனைவியிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிய போது போலீசில் சிக்கினர்.
திண்டிவனம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கொட்டாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை மறைமலைநகரில் தங்கியிருந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் பொன்னுசாமி தனது மனைவி அம்சவள்ளியுடன்(வயது 29) ஒரு மொபட்டில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அம்சவள்ளியின் கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். உடனே பொன்னுசாமி இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் திண்டிவனம் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது திண்டிவனம்- மரக்காணம் கூட்டுரோடு சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து விசாரித்தனர்.
கஞ்சா பறிமுதல்
விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரை சேர்ந்த வீரப்பன் மகன் மணிகண்டன்(23), சென்னை அயனாவரத்தை சேர்ந்த யேசுதாஸ் மகன் சாலமோன்(37) என்பதும் இவர்கள் அம்சவள்ளியிடம் செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது அதில் 1.200 கிராம் கஞ்சா இருந்ததும், அதனை சென்னைக்கு விற்பனைக்காக எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன், சாலமோன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த செல்போன், மோட்டார் சைக்கிள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் மணிகண்டன் மீது விழுப்புரம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் சாராயம் மற்றும் கஞ்சா கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story