மோட்டார் சைக்கிள் பழுதானதால் நடுவழியில் பதைபதைத்து நின்ற பெற்றோர்: வலிப்பு ஏற்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றிய நன்னிலம் போலீசார் ஆபத்பாந்தவனாக உதவியவர்களுக்கு குவியும் பாராட்டுகள்
வலிப்பு ஏற்பட்ட குழந்தையின் உயிரை நன்னிலம் போலீசார் காப்பாற்றி உள்ளனர். மோட்டார் சைக்கிள் பழுதானதால் நடுவழியில் பதைபதைத்து நின்ற பெற்றோருக்கு, ஆபத்பாந்தவனாக உதவியவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நன்னிலம்:-
வலிப்பு ஏற்பட்ட குழந்தையின் உயிரை நன்னிலம் போலீசார் காப்பாற்றி உள்ளனர். மோட்டார் சைக்கிள் பழுதானதால் நடுவழியில் பதைபதைத்து நின்ற பெற்றோருக்கு, ஆபத்பாந்தவனாக உதவியவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குழந்தைக்கு காய்ச்சல்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவருடைய மனைவி மெல்மா. இவர்களுக்கு 1½ வயதில் சுகன்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று மதியம் குழந்தை சுகன்யா காய்ச்சலால் அவதிப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக முத்துக்குமாரசாமியும், அவருடைய மனைவி மெல்மாவும் மோட்டார் சைக்கிளில் நன்னிலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மோட்டார் சைக்கிள் பழுது
நன்னிலம் அருகே சன்னாநல்லூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்றது. இந்த நிலையில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி வலிப்பு ஏற்பட்டது. இதனால் துடிதுடித்த குழந்தையை பார்த்து முத்துக்குமாரசாமியும், அவருடைய மனைவியும் செய்வதறியாது பதறிப்போயினர்.
ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ, கார் எதுவும் ஓடாத நிலையில் மோட்டார் சைக்கிளும் பழுதாகி நின்றதால் குழந்தையை எப்படி மருத்துவமனைக்கு அழைத்து செல்வது? என்ற பதைபதைப்புடன் கணவனும், மனைவியும் நடுவழியில் குழந்தையை வைத்துக்கொண்டு கண்ணீருடன் நின்றிருந்தனர்.
மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார்
இந்த நிலையில் அந்த வழியாக காரில் ரோந்து சென்ற நன்னிலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுக்கள் ராஜேந்திரன், திருநாவுக்கரசு, புகழேந்தி ஆகியோர் குழந்தையுடன் தம்பதி நடுவழியில் நிற்பதை பார்த்து காரை நிறுத்தி விசாரித்தனர்.
இதில் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறிதும் தாமதிக்காமல் போலீசார் உடனடியாக குழந்தை மற்றும் பெற்றோரை ரோந்து வாகனத்தில் ஏற்றி நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
குவியும் பாராட்டுகள்
அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் குழந்தை நலம் அடைந்தது. ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையின் உயிரை ஆபத்பாந்தவனாக வந்து போலீசார் காப்பாற்றிய தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. பல்வேறு தரப்பில் இருந்தும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. போலீசாரின் இந்த செயலை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனும் பாராட்டி உள்ளார்.
Related Tags :
Next Story