தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் அம்மோனியா பாஸ்பேட் உரம் தட்டுப்பாடு


தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் அம்மோனியா பாஸ்பேட் உரம் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 10 Jun 2021 5:18 PM GMT (Updated: 10 Jun 2021 5:22 PM GMT)

தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் அம்மோனியா பாஸ்பேட் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் பலர் மலைக்காய்கறி விவசாயம் செய்து வருகிறார்கள். குறிப்பாக பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்கவும், நன்றாக வளரவும் யூரியா, அம்மோனியா பாஸ்பேட் ஆகிய உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அதேபோல் மலைக்காய்கறிகள் விளைவிக்க உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. குறு, சிறு விவசாயிகள் அரசு திட்டங்கள் மூலம் பயிர் கடன் பெறும்போது, குறிப்பிட்ட அளவு மானிய விலையில் உரம் வாங்க அறிவுறுத்தப்படுகிறது. 

அதன்படி அவர்கள் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் விற்பனை சங்கங்கள் மூலம் உரங்களை வாங்கி வருகின்றனர். ஊட்டி சேரிங்கிராசில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க (என்.சி.எம்.எஸ்.) அலுவலகத்தில் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அங்கு தேயிலை சாகுபடிக்கு அவசிய தேவையான அம்மோனியா பாஸ்பேட் உரம் இருப்பு இல்லை. தட்டுப்பாடு காரணமாக அந்த உரத்தை வாங்க வந்த விவசாயிகள் வெகுநேரம் காத்திருந்து அவதி அடைந்தனர். 

அவர்களிடம் அலுவலர்கள் அம்மோனியா பாஸ்பேட் உரம் கேரள மாநிலம் கொச்சியில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக குறைந்த தொழிலாளர்களை கொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இதனால் உற்பத்தி குறைந்து உள்ளது. இனிவரும் நாட்களில் உரம் வந்தால் தொடர்ந்து வினியோகம் செய்யப்படும் என்றனர். இதனால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- எமரால்டு, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உரம் வாங்குவதற்காக சரக்கு வாகனங்களில் வருகிறோம். முழு ஊரடங்கு உத்தரவு இருப்பதால் போலீசாரிடம் விவசாய பணிக்கு என தெரிவித்து வந்தோம். 

உரம் இல்லாததால் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. 50 கிலோ அம்மோனியா பாஸ்பேட் உரம் ரூ.1,900-த்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. உரம் இல்லாமல் விவசாய பணியை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story