மாவட்ட செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் + "||" + Swing festival at Angalamman temple

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறவில்லை.

 ஆனால் அதன் பாரம்பரியம் மாறிவிடக்கூடாது என்பதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் முடிவு செய்து கோவிலின் உட்பிரகாரத்தில் பக்தர்களின்றி ஊஞ்சல் உற்சவம் நடத்தி வருகின்றனர். அதன்படி வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோவில் உட்பிரகாரத்தில் நடைபெற்றது. முன்னதாக காலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் கோவில் சார்பில் பால், தயிர், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

பின்னர் இரவு 7 மணியளவில் உற்சவ அம்மன் காமாட்சி அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். இதையடுத்து பூசாரிகள் பக்தி, தாலாட்டு பாடல்கள் பாட தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் பூசாரிகள் முக கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 

கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மேலும் ஊஞ்சல் உற்சவம் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் சரவணன் பூசாரி, செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.