நன்னிலம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு:எலிமருந்தை தின்று பெண் தற்கொலை முயற்சிவாலிபர் கைது; 3 பேர் மீது வழக்கு


நன்னிலம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு:எலிமருந்தை தின்று பெண் தற்கொலை முயற்சிவாலிபர் கைது; 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Jun 2021 11:14 PM IST (Updated: 10 Jun 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் எலிமருந்தை தின்று பெண் தற்கொலைக்கு முயன்றார். இதற்கு காரணமான வாலிபரை போலீசார் கைது செய்து, மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை(வயது28). இவர் அப்பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். மேலும் அந்த பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சத்து 44 ஆயிரம் வாங்கி கொண்டு அவரை திருமணம் செய்வதாக ராஜதுரை கூறினார்.

இந்தநிலையில் திடீரென ராஜதுரை தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதால், உன்னை திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் ராஜதுரை பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணை ராஜதுரையின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் திட்டியதாக தெரிகிறது.

வாலிபர் கைது

இதனால் மனமுடைந்த அந்த பெண் வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று மயங்கினார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அந்த பெண் நன்னிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ராஜதுரை, அவரது பெற்றோர் வேதலட்சுமி, உறவினர்கள் இந்திராணி, செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும் ராஜதுரையை கைது செய்து, 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்.

Next Story