கட்டுமர மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்


கட்டுமர மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்
x
தினத்தந்தி 10 Jun 2021 5:51 PM GMT (Updated: 10 Jun 2021 5:51 PM GMT)

குளச்சலில் கட்டுமர மீனவர்கள் வலையில் நேற்று ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

குளச்சல்:
குளச்சலில் கட்டுமர மீனவர்கள் வலையில் நேற்று ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
மீன்பிடி தடைக்காலம்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமர படகுகளும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவார்கள். கட்டுமர மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரை திரும்புவார்கள். 
மீன்கள் இனப்பெருக்கம் காலத்தையொட்டி விசைப்படகுகள் கடந்த மே 31-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந் தேதிவரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. 
அத்துடன் கொரோனா ஊரடங்கால் கட்டுமர மீனவர்களும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்ைக விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைபடி கடலோர கிராமங்களில் கட்டுமரங்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. 
நெத்திலி மீன்
அதன்படி நேற்று குளச்சல் பகுதியை சேர்ந்த கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களின் வலைகளில் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைத்தன. அவற்றை மீனவர்கள் துறைமுக  ஏலக்கூடத்தில் குவித்து வைத்தனர். இதனை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்து சென்றனர். பலர் கேரள மீன் சந்தை விற்பனைக்கு வாங்கி சென்றனர். சிலர் கருவாடாக பதப்படுத்த வாங்கி சென்றனர். ஒரு கூடை நெத்திலி மீன் ரூ.900 முதல் ரூ.2,500 வரை விலை போனது.
நெத்திலி மீன்கள் அதிகம் கிடைத்த போதும், போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலையடைந்தனர்.

Next Story