மதுபாட்டில்களை கடத்தி வந்த லாரி சுல்தான்பேட்டையில் சிக்கியது


மதுபாட்டில்களை கடத்தி வந்த  லாரி சுல்தான்பேட்டையில் சிக்கியது
x
தினத்தந்தி 10 Jun 2021 11:33 PM IST (Updated: 10 Jun 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

வெங்காய மூட்டை களுக்கு இடையே மறைத்து வைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த லாரி சுல்தான்பேட்டையில் சிக்கியது.

சுல்தான்பேட்டை

வெங்காய மூட்டை களுக்கு இடையே மறைத்து வைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த  லாரி சுல்தான்பேட்டையில் சிக்கியது. தப்பியோடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுபாட்டில்கள் கடத்தல்

சுல்தான்பேட்டை ஒன்றியம் இடையர்பாளையம் அருகே உள்ள காட்டு பகுதியில் நேற்று காலை சந்தேகத்திற்கு இடமாக லாரி நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த லாரியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது லாரியில் வெங்காய மூட்டைகள் இருந்தன. தொடர்ந்து சோதனை செய்தபோது, வெங்காய மூட்டைகளுக்கு இடையில் மறைத்து வைத்து கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 803 மதுபாட்டில்கள் இருந்தன. 

டிரைவருக்கு வலைவீச்சு

இதையடுத்து போலீசார் அந்த மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டி வந்தது சங்ககிரி வடுகபட்டியை சேர்ந்த சங்கர் என்பதும், இவர் வெங்காய லாரியில் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய சங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story