யானைகளின் வழித்தடத்தை பாதுகாக்க 1,049 எக்டர் நிலம் வனப்பகுதியில் சேர்த்து கலெக்டர் நாகராஜன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.


யானைகளின் வழித்தடத்தை பாதுகாக்க 1,049 எக்டர் நிலம் வனப்பகுதியில் சேர்த்து கலெக்டர் நாகராஜன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
x
தினத்தந்தி 10 Jun 2021 7:06 PM GMT (Updated: 10 Jun 2021 7:06 PM GMT)

யானைகளின் வழித்தடத்தை பாதுகாக்க 1,049 எக்டர் நிலம் வனப்பகுதியில் சேர்த்து கலெக்டர் நாகராஜன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

கோவை

யானைகளின் வழித்தடத்தை பாதுகாக்க 1,049 எக்டர் நிலம் வனப்பகுதியில் சேர்த்து கலெக்டர் நாகராஜன் நடவடிக்கை எடுத்து உள்ளார். 

யானைகளின் வழித்தடம் 

கோவை கோட்ட வனப்பகுதி 690 சதுர கி.மீ. பரப்பளவுக்கு அதிகமாக உள்ளது.

 இந்த கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரிய நாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கழுதைப்புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. 

குறிப்பாக கோவை கோட்ட வனப்பகுதி இடம்பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளின் வலசைபாதையாக (வழிப்பாதை) உள்ளது. இதனால் இங்கு எப்போதுமே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். 

இந்த நிலையில் காட்டு யானைகளின் வழித் தடத்தை பாதுகாக்க வனப்பகுதியில் கூடுதல் நிலம் சேர்க்க கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து வனப்பகுதியில் கூடுதலாக 1,049 எக்டர் நிலம் சேர்க்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து கோவை மண்டல முதன்மை தலைமை வனபாதுகாப்பு அதிகாரி அன்வர்தீன், மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:-

1,049 எக்டர் நிலம்

கோவை மாவட்டத்தின் காடுகள் மற்றும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் பாதுகாப்பை பேணும் வகையில் கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். 

அதன்படி வருவாய் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான 1,049 எக்டர் நிலங்கள் வனப்பகுதியில் சேர்க்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக மேட்டுப்பாளையம் கெம்மராம்பாளையம், காரமடை, தோலம்பாளையம், மருதூர், ஒடையகுளம், ஜமீன் ஊத்துக்குளி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள இந்த நிலங்கள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

பரப்பளவு அதிகரிப்பு

தனியார் வன நிலங்களை பேணும் சட்டத்தின்படி கல்லார் பகுதியில் யானை வலசை பாதையை பாதுகாக்க அங்குள்ள வனப்பகுதியில் நடுவே அமைந்து இருக்கும் 50.79 எக்டர் தனியார் நிலங்களை தனியார் வனமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இயற்கையையும், வனவிலங்குகளையும் வளப்படுத்த வனத்துறைக்கு பரிசாக இது கிடைத்துள்ளது. ஏற்கனவே கோவை மாவட்டத்தின் வனப்பரப்பு 1 லட்சத்து 22 ஆயிரத்து 215.13 எக்டர் நிலமாக இருந்தது. 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 1,049.74 எக்டர் நிலம் சேர்ந்து உள்ளதால், மொத்த வனப்பரப்பு 1 லட்சத்து 23 ஆயிரத்து 264.87 எக்டராக அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் பாராட்டு

1,049 எக்டர் நிலங்களை வனப்பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் நாகராஜனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பாராட்டி புத்தகம் பரிசாக வழங்கினார்.


Next Story