ரூ 1½ லட்சத்தை திரும்ப கொடுக்காததால் தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது


ரூ 1½ லட்சத்தை திரும்ப கொடுக்காததால் தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 7:10 PM GMT (Updated: 10 Jun 2021 7:10 PM GMT)

ரூ.1½ லட்சத்தை திரும்ப கொடுக்காததால் தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர்.

வடவள்ளி

ரூ.1½ லட்சத்தை திரும்ப கொடுக்காததால் தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

இன்ஸ்டாகிராம் தோழி 

கோவையை அடுத்த வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 28), தச்சு தொழிலாளி. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தர்ம புரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். 

இந்த நிலையில் அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு அவரச தேவையாக ரூ.1½ லட்சம் தேவைப்படுகிறது என்று சவரணகுமாரிடம் கூறினார். அந்த பணத்தை கொடுத்தால் விரைவில் திரும்ப கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தார்.

ரூ.1½ லட்சம் கொடுத்தார் 

இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் தோழிக்கு ரூ.1½ லட்சத்தை கொடுத்தார். பின்னர் அதை கேட்டும் அந்த பெண் திரும்ப கொடுக்க வில்லை. பலமுறை கேட்டும் பணத்தை திரும்ப கொடுக்காததால் தர்மபுரி செல்ல சரவணகுமார் முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் தர்மபுரிக்கு சென்றார். ஏற்கனவே அந்த பெண்ணின் முகவரி அவருக்கு தெரியும் என்பதால், நேராக தனது தோழியின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த தனது தோழியை சந்தித்து தான் கொடுத்த கடனை திரும்ப கொடுக்கும்படி கூறினார். 

தோழியின் மகன் கடத்தல் 

அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை. பணம் கிடைக்கும் போது கொடுப்பதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், தனது தோழியின் 7 வயது மகனை அங்கிருந்து கடத்தி வந்தார். 

இது குறித்து அவர் தர்மபுரி போலீசில் புகார் செய்தார். சரவண குமார் கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் என்பதால் உடனே தர்மபுரி போலீசார் வடவள்ளி போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். 

கைது; சிறுவன் மீட்பு 

இதையடுத்து வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி  சரவணகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கடத்தி வைத்திருந்த 7 வயது சிறுவனையும் மீட்டனர். போலீசார் இது குறித்து தர்மபுரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீசார் வடவள்ளி வந்தனர். அவர்களிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story