சதுரகிரி கோவிலில் உணவின்றி தவிக்கும் குரங்குகள்
சதுரகிரி கோவிலில் உணவின்றி குரங்குகள் தவித்து வருகின்றன.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
சாமி தரிசனம்
இந்த நாட்களில் மட்டுமே கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு. மற்ற நாட்களில் கோவில் அடிவாரப்பகுதி வரை பக்தர்கள் வந்து வனத்துறை கேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது கோவில்களில் வழக்கம் போல் பூைஜகள் நடைபெறுகிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல இந்த கோவிலிலும் பக்தர்களுக்கு தற்போது அனுமதி கிடையாது. ஆதனால் வனத்துறை கேட் அடைக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடியது
இதனால் பக்தர்கள் வருகை இன்றி கோவில் அடிவாரப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆதலால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கும் குரங்குகள் அடிவாரப்பகுதியான தாணிப்பாறை பகுதியில் குடிநீர் மற்றும் உணவின்றி தவித்து வருகிறது.
அடிவார பகுதியில் குடிநீர், உணவு கிடைக்காததால் அப்பகுதியில் குரங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றது.
அடிவார பகுதியில் குடிநீர் தொட்டி இருந்தும் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பாததால் குரங்குகள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறது.
தவிக்கும் குரங்குகள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் சுற்றித்திரிந்து வருகின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை இன்றி தாணிப்பாறை அடிவாரம் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. கோவிலுக்கு பக்தர்கள் வருகையின் போது இப்பகுதியில் கிடைக்கும் உணவையும், குடிநீரையும் குடித்து குரங்குகள் வாழ்ந்து வந்தன.
தற்போது பக்தர்கள் வராததால் குரங்குகள் உணவின்றி, தண்ணீரின்றி தவித்து வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story