திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தோல்வி: அ.தி.மு.க. தலைமையை குற்றஞ்சாட்டி சசிகலாவிடம் பேசிய கட்சி நிர்வாகி


திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தோல்வி: அ.தி.மு.க. தலைமையை குற்றஞ்சாட்டி சசிகலாவிடம் பேசிய கட்சி நிர்வாகி
x
தினத்தந்தி 10 Jun 2021 8:55 PM GMT (Updated: 10 Jun 2021 8:55 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததற்கு அ.தி.மு.க. தலைமையை குற்றஞ்சாட்டி சசிகலாவிடம் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததற்கு அ.தி.மு.க. தலைமையை குற்றஞ்சாட்டி சசிகலாவிடம் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் செல்போனில் அழைப்பு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறைதண்டனை அடைந்து விடுதலையாகி வெளியே வந்தார். பின்னர், தான் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்தார்.

ஆனால் சமீபகாலமாக சசிகலா சென்னையில் இருந்தபடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சி நிர்வாகிகளை செல்போனில் அழைத்து பேசி வருகிறார். சசிகலா தன்னை அழைத்து பேசுகிறார் என்றதும், அவர்களும் தங்களது மனக்குமறலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

9 தொகுதிகளிலும் தோல்வி

இந்த நிலையில் திருச்சியில் ஏற்கனவே அ.ம.மு.க. நிர்வாகியிடம் சசிகலா பேசி இருந்தார். தற்போது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளராக உள்ள அருள்ஜோதி என்பவரை தொடர்பு கொண்டு சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த உரையாடல் விவரம் வருமாறு:-

சசிகலா:- ஹலோ வணக்கம்! அருள்ஜோதி நல்லா இருக்கிறீர்களா? 

அ.தி.மு.க. நிர்வாகி அருள்ஜோதி:- நல்லா இருக்கிறேன்மா. நான் மாநகர் மாவட்ட கழக துணை செயலாளராக கடந்த 25 ஆண்டுகளாக ஒரே பதவியில் உள்ளேன். தேர்தலில் இந்த மாதிரி தோல்வியை சரித்திரத்திலே பார்த்ததில்ைலயம்மா. திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தோல்வி அடைந்து சுத்தமாக வாஷ் அவுட் ஆயிடுச்சு.

சசிகலா:- மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு.

திருச்சி திருப்புமுனை

அ.தி.மு.க. நிர்வாகி:- எங்களுக்கும் கஷ்டமாக இருக்கு. நீங்க நல்ல முடிவெடுங்க. நீங்க கட்சிக்கு வந்தா திருப்பு முனையாக இருக்கும். திருச்சியில் திருப்புமுனை செய்துதான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதுபோல நீங்களும் திருச்சியில் இருந்து நல்ல முடிவெடித்தால் திருப்பு முனையாக இருக்கும். தொண்டர்களெல்லாம் உங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள், கண்டிப்பாக நீங்கள் வர வேண்டும்.

சசிகலா:- சரி..சரி.. நிச்சயமாக செய்வோம். கவலைப்படாதீங்க. தலைவர், அம்மா வழியில் நிச்சயமாக கட்சியை நல்லவழியில் கொண்டுபோக முடியும். தொண்டர்களெல்லாம் தைரியமாக இருங்க. அதுபோதும் எனக்கு. நான் நிச்சயமாக வந்திருவேன். கட்சியை அம்மா இருந்தபோது எப்படி இருந்ததோ அதுபோல கொண்டு போவோம். 

அ.தி.மு.க. நிர்வாகி:- எல்லோரும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. தொண்டர்கள் பூராவும் உங்கள் பக்கம்தான் இருக்காங்க.

சசிகலா:-அதான், அதான் தெரியுது. நான் நிச்சயம் வருவேன். கவலைப்படாதீங்க..

அ.தி.மு.க. நிர்வாகி:- ஒரு பொதுத்தொகுதியில் தலித் எழில்மலையை அம்மா நிற்க வைத்து ஜெயிக்க வைத்தார். 

சசிகலா:- நம்ம அப்படி சாதியெல்லாம் பார்க்கிறதில்லேயே...
தலைமை மீது குற்றச்சாட்டு

அ.தி.மு.க. நிர்வாகி:- தற்போது கட்சியில் சாதி அரசியல் பண்ணிக்கொண்டு கூட்டணியெல்லாம் அமைத்து கட்சியை வீணாக்கி விட்டார்கள். நம் கட்சிக்காரர்களையெல்லாம் எதிர்க்கட்சிபோல ஆக்கி விட்டார்கள். அவர்கள் மட்டும் கட்சியில் வளர்ந்தால் போதும் என நினைத்து விட்டார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்க.

சசிகலா:- சரி...சரி... நிச்சயம் நான் வந்ததும் செய்கிறேன்.

இந்த உரையாடல் 2 நிமிடம் 53 வினாடிகள் இடம் பெற்றுள்ளது.

Next Story