வளைய சூரிய கிரகணத்தை உடுமலை மாணவர்கள் இணையவழியில் பார்த்தனர்


வளைய சூரிய கிரகணத்தை உடுமலை மாணவர்கள் இணையவழியில் பார்த்தனர்
x
தினத்தந்தி 11 Jun 2021 3:20 AM IST (Updated: 11 Jun 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

கனடாவில் தெரிந்த வளைய சூரிய கிரகணத்தை உடுமலையில் மாணவர்கள் இணையவழியில் பார்த்து ரசித்தனர்.

உடுமலை
கனடாவில் தெரிந்த வளைய சூரிய கிரகணத்தை உடுமலையில் மாணவர்கள் இணையவழியில் பார்த்து ரசித்தனர்.
வளைய சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. சந்திரன், சூரியனின் ஒளியை மறைக்கின்ற இந்த நிகழ்வு 3 வகையாக நிகழ்கிறது. அவை முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகும். சந்திரன், சூரியனின் விளிம்புப் பகுதியை தவிர அதன் மையப் பகுதியை முழுவதுமாக மறைப்பது வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வளைய சூரிய கிரகணம் நேற்று கனடா, கிரீன்லாந்து, ரஷியா போன்ற இடங்களில் மிக தெளிவாக தெரிந்தது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் சில பகுதிகள், வடக்கு அலாஸ்கா, கனடாவின் சில பகுதிகள், ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி சூரிய கிரகணமாக தென்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.41 மணி வரை இந்த நிகழ்வு நடந்தது. உடுமலையில் இந்த சூரிய கிரகணத்தை இணையவழியில் பார்ப்பதற்கு உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
மாணவர்கள் பார்த்தனர்
கனடாவின் சில பகுதிகளில் இருந்து அறிவியலாளர்கள் மூலமாக யூடியுப் நேரலையில் மிக அழகாக இந்த வளைய சூரிய கிரகணம் ஒளிபரப்பப்பட்டது. அதை உடுமலையில் மாணவர்கள் கணினி மூலம் இணையவழியில் பார்த்து ரசித்தனர். வானில் நிகழ்கின்ற இதுபோன்ற அரிய வானியல் நிகழ்வுகளை பார்ப்பதன் மூலமாக வானியல் அறிவையும், ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டையும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்று உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான் தெரிவித்தார்.

Next Story