கொரோனாவிற்கு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பலி


கொரோனாவிற்கு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2021 3:35 AM IST (Updated: 11 Jun 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவிற்கு மொரட்டுபாளையம் கிராம நிர்வாக அதிகாரி பலியான நிலையில் நேற்று முன்தினம் செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பலியானார்.

ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவிற்கு மொரட்டுபாளையம் கிராம நிர்வாக அதிகாரி பலியான நிலையில் நேற்று முன்தினம் செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பலியானார்.
கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்
ஊத்துக்குளி டவுன் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). இவர் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு துளசிமணி (48) என்ற மனைவியும் சுகன்யா (31), சுஜிதா (15) என்ற இரு மகள்கள் உள்ளனர். 
சுகன்யா திருமணமாகி சென்னிமலையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சுஜிதா தனது பெற்றோருடன் பாரதி நகர் வீட்டில் வசித்து வருகிறார்.
கொரோனாவிற்கு பலி
இந்நிலையில் கொரோனா 2-ம் அலை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பலர் இதற்கு பலியாகி வருகின்றனர். செல்வகுமார் தனது பணி நிமிர்த்தமாக தினமும் ஊத்துக்குளியில் இருந்து செங்கப்பள்ளி வந்து சென்றார். இதன் காரணமாக கடந்த மாதம் இறுதி வாரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
 இதனைத் தொடர்ந்து செல்வகுமார் தனது குடும்பத்தினருடன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் செல்வகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கடந்த மாதம் 30-ந் தேதி ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் செயல்படும் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
அச்சம்
ஊத்துக்குளி பகுதியில் அடுத்தடுத்து அரசு பணியாளர்கள் கொரோனாவிற்கு பலியாகி வருவது பொதுமக்கள், அரசு பணியாளர்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story