வடகால் கிராமத்தில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


வடகால் கிராமத்தில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 1:00 PM GMT (Updated: 11 Jun 2021 1:00 PM GMT)

வடகால் கிராமத்தில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காங்கேயன் வாய்க்கால், பொன்னியம்மன் வாய்க்கால், லிங்கத்தடி வாய்க்கால், சஞ்சீவிராயன் கோவில் வாய்க்கால், அய்யனார் கோவில் வாய்க்கால், கொல்லைப்புற வாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்கள் உள்ளன.

இந்த வாய்க்காலை நம்பி 500 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த நிலையில் மேற்கண்ட வாய்க்கால்களை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறையினர் தூர்வாரப்படாததால் தற்போது வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் செடி, கொடிகள் மண்டி கிடக்கின்றன.

இதன் காரணமாக இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் மழைநீரை நம்பித்தான் விவசாயம் செய்து வருகின்றனர். மேற்கண்ட வாய்க்கால்களை தூர்வார கோரி பொதுப்பணித்துறைக்கு பலமுறை புகார் செய்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி சம்பா சாகுபடி செய்வதற்கு தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் வடகால் கிராமத்தில் உள்ள மேற்கண்ட வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பொறை வாய்க்கால் பாசன சபை தலைவர் மனோகரன் கூறுகையில், வடகால் கிராமத்தில் உள்ள கொல்லைப்புற வாய்க்கால், பொன்னியம்மன் வாய்க்கால், அய்யனார் கோவில் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் பாசன வசதி இல்லாமல் வடகால் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மழைநீரை நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த ஆண்டு மேற்கண்ட வாய்க்கால்களை தூர்வாரவில்லை என்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் எனவே பொதுப்பணித்துறையினர் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் சீர்காழி பகுதிக்கு வருவதற்குள் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Next Story