செம்பனார்கோவிலில், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம்: தொற்று அறிகுறி உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின்றி மருந்து எடுக்கக்கூடாது - கலெக்டர் லலிதா பேச்சு
கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின்றி மருந்து எடுக்கக்கூடாது என்று கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார்.
பொறையாறு,
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ராமலிங்கம், எம்.பி., நிவேதா முருகன், எம்.எல்.ஏ. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரகாஷ், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர் வரவேற்று பேசினார்.
அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் களப்பணி செய்வதற்கான, பல்ஸ் ஆக்சி மீட்டர், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, முக கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை அடங்கிய தொகுப்பினை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் உள்ள 11 மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டமும் உள்ளது. தொற்றின் வேகம் 70-ல் இருந்து 450 ஆக அதிகரித்தது. எனவே. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊராட்சி அளவில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வீடு வீடாக கணக்கெடுப்பு பணிக்கு தேவையான ஆக்சிஜன் கண்டறியும் பல்ஸ் ஆக்சி மீட்டர், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, முக கவசங்கள், கிருமிநாசினி ஆகியவைகள் அடங்கிய தொகுப்பினை ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி ஊராட்சி மன்ற தலைவர் தங்களது கிராமங்களில் கொரோனா தொற்று பரிசோதனை குழுக்கள் மூலம் வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல் சுவாசத்தன்மை இல்லாதிருத்தல் உள்ளிட்ட 9 வகையான அறிகுறிகள் உள்ளனவா? என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது கிராமங்களில் யாருக்காவது கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் மருத்துவர்கள் மூலம் கொரோனா தொற்று அறிகுறியுடையவர்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் நடைபெறும் இறப்பு மற்றும் திருமண நிகழ்வுகளில் கூட்டம் அதிகம் கூடாமல் சமூக இடைவெளியுடன் நடைபெறுவதை ஊராட்சி மன்ற தலைவர் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின்றி மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் போதுமான அளவு மருத்துவர்கள் பணியில் உள்ளனர். அதேபோல் தேவையான அளவு மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. ஊராட்சிமன்ற தலைவர்கள் கிராம மக்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் செம்பனார்கோவில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக்சந்திரக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைக்கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story