ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நீதிபதி தலைமையில் வல்லுனர் குழு - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நீதிபதி தலைமையில் வல்லுனர் குழுவைமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர்,
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடவாறு தஞ்சை மாநகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் மூவர்கோட்டை வரையில் வடவாறு என்ற பெயரிலும், மூவர் கோட்டையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரம் வடவாறு விரிவாக்க கால்வாயாக முத்துப்பேட்டை அருகே திருமேணி ஆறு மூலம் கண்ணனாற்றில் கலக்கிறது.
தஞ்சை, அம்மாப்பேட்டை, நீடாமங்கலம், மன்னார்குடி, மதுக்கூர், கோட்டூர் ஒன்றியப்பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் வழியாக சென்று 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன ஆறாகவும் வடவாறு விளங்குகிறது. இந்த ஆற்றில் தஞ்சை மாநகரத்தில் கழிவுநீர் முழுமையும் கலக்கப்படுவதால் ஒட்டுமொத்தமாக வரக்கூடிய தண்ணீர் மாசடைந்து தொற்றுநோய் பரவும் பேராபத்து ஏற்படுகிறது.
தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட பெரும்பாலான பாசன ஆறுகள் கழிவு நீர் கால்வாய்களாக மாறி விட்டது. ஆறுகள் மாசடைந்து ஆற்றங்கரைகளில் குடியிருக்கும் மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.
விளைநிலங்கள் மலடாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே இதை கருத்தில் கொண்டு நீதிபதி தலைமையில் ஒரு உயர்மட்ட வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்து கழிவுநீர் கலப்பதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story