தமிழகத்தில் 33,807 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன- அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தமிழகத்தில் தற்போது 33,807 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை
தமிழகத்தில் தற்போது 33,807 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருத்துவ உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி டீன் திருமால்பாபு வரவேற்றார்.
கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 45,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
தொற்றை தடுக்க வேண்டும் என்றால் தடுப்பூசி மிகவும் அவசியம். மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி சிறப்பு முகாம்கள் மூலமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொரோனா நல மையம்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா நல மையம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோய்க்கு மாவட்டத்தில் 4 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,000 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா சிகிச்சைக்காக 675 படுக்கைகள் ஒதுக்கப்பட்டது. இதில் 130 சாதாரண படுக்கை, 405 ஆக்சிஜன் படுக்கை, 140 ஐ.சி.யு. படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இங்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட 70 படுக்கை வசதிகளும் உள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தலா 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு அலகுகள் 2 உள்ளது. இதில் 12 ஆயிரத்து 110 லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது.
தமிழகத்தில் தற்போது 33 ஆயிரத்து 807 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன. படுக்கைகள் பற்றாக்குறை கிடையாது. முதல்-அமைச்சரின் சீரிய நடவடிக்கையால் அனைத்து மருத்துவமனைகளிலும் உடனுக்குடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கருப்பு பூஞ்சை
கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து உள்ளது.
திருவண்ணாமலை மருத்துவமனையில் இந்நோய்க்கு 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 25 நோயாளிகள் இங்கு வராமல் சென்னை உள்பட பிற மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த நோயாளிகளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 54 பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் வேலூர்-செங்கம் புறவெளிச்சாலை இணைக்கும் சாலை அமைக்கும் பணி, செங்கம் நகர புறவெளிச்சாலை அமைக்கும் பணி, அவலூர்பேட்டை செல்லும் சாலையில் ரெயில்வே பாலம் கட்டும் பணி, வேட்டவலம் ரெயில்வே பாலம், வேட்டவலம் புறவெளிச்சாலை அமைக்கும் பணி, அம்மாபாளையம் பால் பவுடர் தொழிற்சாலையில் உபப்ெபாருட்கள் செய்ய விரிவாக்கம் செய்யும் பணி, உழவர் சந்தை விரிவுப்படுத்தும் பணி போன்ற பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவு பொட்டலம்
முன்னதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள 2 திரவ ஆக்சிஜன் சேமிப்பு அலகினையும், ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்பு அறையையும் அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொதுமக்களுக்கு மதிய உணவு பொட்டலம் வழங்கும் பணியையும் அவர் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
Related Tags :
Next Story