கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு வாலிபரை கொல்ல முயற்சி-கட்டிட மேஸ்திரிக்கு போலீஸ் வலைவீச்சு


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு வாலிபரை கொல்ல முயற்சி-கட்டிட மேஸ்திரிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2021 10:53 PM IST (Updated: 11 Jun 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வாலிபரை, தாயின் கள்ளக்காதலன் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றார். இதுதொடர்பாக கட்டிட மேஸ்திரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாலக்கோடு:
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர் மீது துப்பாக்கிச்சூடு
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவருடைய மனைவி சுசிலா (39). இவர்களது மகன் தினேஷ்குமார் (21). தந்தை, மகன் 2 பேரும் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் நாட்டுத்துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். இதில் தினேஷ்குமாரின் கால் மற்றும் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டு அவருடைய பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். 
கள்ளக்காதல்
இதைப்பார்த்து துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த தினேஷ்குமாரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான விஜயகாந்த் (37) என்பவருக்கும், தினேஷ்குமாரின் தாயார் சுசிலாவுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இவர்கள் 2 பேரும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு  ஓடி விட்டனர். இந்தநிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுசிலா விஜயகாந்தை விட்டு விட்டு வீட்டுக்கு வந்து கணவன், மகனுடன் வசித்து வந்துள்ளார். 
இடையூறு
கள்ளக்காதலியை பார்க்க விஜயகாந்த் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது சுசிலா, தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும். இதனால் நாம் கள்ளத்தொடர்பை கைவிட்டு விடலாம். இனி வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறி உள்ளார். ஆனால் கள்ளக்காதலியை பார்க்காமல் தவித்த விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார்.
இதையறிந்த தினேஷ்குமார் விஜயகாந்தை இங்கு வரக்கூடாது என்று கண்டித்தார். இதனால் அவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள தினேஷ்குமாரை  துப்பாக்கியால் சுட்டுக்ெகாள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி நள்ளிரவு விஜயகாந்த் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்து வாலிபரை சுட்டு விட்டு தப்பியோடி விட்டது தெரிய வந்தது.
வலைவீச்சு
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜயகாந்தை வலைவீசி தேடி வருகிறார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாலிபரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story