அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் மருத்துவ கழிவுகளை அகற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை


அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் மருத்துவ கழிவுகளை அகற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 5:25 PM GMT (Updated: 11 Jun 2021 5:25 PM GMT)

அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் மருத்துவக்கழிவுகளை அகற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ கழிவுகள்
சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, அதனை பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனை பின்பற்றுவதின் மூலம் மருத்துவ கழிவுகள் உருவாவதையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைத்திட இயலும். இந்த விதிமுறைகளை அமல்படுத்த மற்றும் செயல்படுத்துவதற்கான அதிகாரம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் உள்ளது.
புகார்கள் 
இந்த விதிகளின் படி, மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவ கழிவுகள் முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்த கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்குள் சேமிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மருத்துவ கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனாலும் மருத்துவ கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள் மற்றும் நீர் நிலைகள் போன்றவற்றில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன.
கடும் நடவடிக்கை
தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று சூழலில், மருத்துவ கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அனைத்து மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்தும் முகாம்கள், மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.
மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் மருத்துவ கழிவுகளை அகற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story