மண்டைக்காடு கோவிலின் மேற்கூரை, மரபு மாறாமல் சீரமைக்கப்படும்


மண்டைக்காடு கோவிலின் மேற்கூரை, மரபு மாறாமல் சீரமைக்கப்படும்
x
தினத்தந்தி 11 Jun 2021 11:37 PM IST (Updated: 11 Jun 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு கோவிலின் மேற்கூரை மரபு மாறாமல் சீரமைக்கப்படும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு கோவிலின் மேற்கூரை மரபு மாறாமல் சீரமைக்கப்படும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த 2-ந்தேதி கோவிலின் கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது கோவிலில் தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணி பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
தொல்லியல் துறையினர் ஆய்வு
இந்த நிலையில் இந்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் பொறியாளர் கலைசெல்வன், உதவி அலுவலர் லத்தீஸ்குமார் ஆகியோர் அடங்கிய ஆய்வு குழுவினர் நேற்று மண்டைக்காடு கோவிலுக்கு வந்தனர். 
பின்னர் அவர்கள் கோவிலில் பிரகாரம் மற்றும் தீ விபத்தில் சேதமடைந்த மேற்கூரை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தேவசம் போர்டு மராமத்து பொறியாளர் அய்யப்பன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
நவீன தொழில்நுட்பம்
பின்னர் தொல்லியல் துறை அதிகாரிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-
புராதன இடங்களில் பூகம்பம், தீ விபத்து போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும்போது தொல்பொருள் ஆய்வு துறை மேலாண்மை பணிக்கு ஆய்வு மேற்கொள்ளும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க யுக்திகள் அளிக்கப்படும். 
கடந்த 2-ந்தேதி மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தமிழக அரசு இங்கு ஆய்வு நடத்த கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் இன்று (நேற்று) ஆய்வு நடத்தப்பட்டது. சீரமைக்கும் பணியில் நவீன தொழில் நுட்பம் மற்றும் புதிய உபகரணங்களை கையாளும் போது மரபு மாறாமல் பார்த்துக் கொள்ளப்படும். சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வருகிற திங்கட்கிழமைக்குள் எங்கள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மர உபகரணங்கள் தீ பிடிக்காத வண்ணம் அமைக்க பரிந்துரைக்கப்படும்.
தானியங்கி தீயணைப்பான்
கோவிலில் பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல் அடங்கிய அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும். தானியங்கி தீயணைப்பான் கருவி கூட அமைக்கலாம். அப்படி தீ விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துறையினருக்கு குறுஞ்செய்தி செல்லும். அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட முடியும். தீ அணைக்கப்பட்டு பெரும் தீ விபத்து தவிர்க்கப்படும்.
திருவிழா போன்ற காலங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கூட்டத்தில் இருந்து பக்தர்கள் உடனே வெளியேற பாதுகாப்பு வழி ஏற்படுத்த வேண்டும். கோவிலில் தீயணைப்பு கருவிகள் அமைத்தால் மட்டும் போதாது. தீயை அணைப்பதற்கு கோவில் குருக்கள், பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story