திருத்துறைப்பூண்டி பகுதியில், கொரோனாவை மறந்து ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள் அதிகாரிகள் கவனிப்பார்களா?


திருத்துறைப்பூண்டி பகுதியில், கொரோனாவை மறந்து ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள் அதிகாரிகள் கவனிப்பார்களா?
x
தினத்தந்தி 11 Jun 2021 6:26 PM GMT (Updated: 11 Jun 2021 6:26 PM GMT)

திருத்துறைப்பூண்டி பகுதியில் கொரோனாவை மறந்து மக்கள் ரேஷன் கடைகளில் குவிந்து வருகிறார்கள். இதை அதிகாரிகள் கனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருத்துறைப்பூண்டி,

இந்தியா முழுவதும் கொரோனா நோய்தொற்று பரவல் காணப்படுகிறது. ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிர்பலியும் அதிகமாக உள்ளது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் நோய் தொற்று அதிகமாக உள்ள திருவாரூர் உள்பட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் பொருட்கள் வாங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனாவை மறந்து...

முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு ெதாடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலானோர் சமூக இடைவெளி போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது இல்லை. திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி என்பது பின்பற்றப்படுவதே இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நேற்று திருத்துறைப்பூண்டி- நாகை சாலையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொதுமக்கள் கொரோனாவை மறந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக திரண்டு நின்றபடி பொருட்களை வாங்கி சென்றனர்.

பாதிப்பு குறையாத மாவட்டம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘அரசு சிரமத்தை குறைப்பதற்காகவே கடைகளை திறக்க அனுமதித்துள்ளது. ஆனால் பலர் நோய் தொற்றை பரப்பும் விதமாக செயல்படுகின்றனர். கொரோனா பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்பதை மறந்து, கடைகளில் கூடி நின்று பொருட்களை வாங்குகின்றனர். சிலர் முககவசம் கூட அணிவதில்லை. எனவே அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு ரேஷன், மளிகை, காய்கறி கடைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story