திருச்சி புலிவலம் மணற்போக்கியில் இருந்து ரூ.29¾ லட்சத்தில் கொடிங்கால் வடிகால் தூர்வாரும் பணி; மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
திருச்சி உய்யக்கொண்டான் புலிவலம் மணற்போக்கியில் இருந்து ரூ.29¾ லட்சத்தில் கொடிங்கால் வடிகால் தூர்வாரும் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி,
திருச்சி உய்யக்கொண்டான் புலிவலம் மணற்போக்கியில் இருந்து ரூ.29¾ லட்சத்தில் கொடிங்கால் வடிகால் தூர்வாரும் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு
காவிரி டெல்டா பகுதியில் தூர்வாருவதற்காக திருச்சி மண்டலத்தில் 589 பணிகளுக்கு ரூ.62 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், சென்னை மண்டலத்தில் 53 பணிகளுக்கு ரூ.2 கோடியே 20 லட்சத்துக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களிலுள்ள காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள், வாய்க்கால்கள், பிரிவு வாய்க்கால்களில் உள்ள முட்செடிகளை அகற்றி தூர்வாருவதன் மூலம் தண்ணீர் கடைமடை வரை எளிதாக சென்று பாசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை, திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டின்கீழ் பாசன ஆதாரங்களில் திருச்சி மாவட்டத்திலுள்ள 20 பணிகளுக்கு ரூ.1 கோடியே 77 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 66.11 கிலோ மீட்டர் தூரம் வரை தூர்வார வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நீரோட்டத்திற்கு தடை
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட புலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள உய்யக்கொண்டான் கால்வாய் வெள்ளப்பெருக்கு காலத்தில் புலிவலம் மணற்போக்கியில் இருந்து உபரிநீராக செல்லக்கூடிய கொடிங்கால் வடிகால் வாய்க்கால் தூர்அடைந்தும், மண்மேடுகளாகவும், செடி,கொடிகள் வளர்ந்தும் நீரோட்டத்திற்கு தடையாக காணப்பட்டது. இதனால் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் வரும் கூடுதல் நீரினால் அப்பகுதி பாசன நிலங்கள் மற்றும் கிராம பகுதிகள் மிகவும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை இருந்தன.
ரூ.29¾ லட்சம் ஒதுக்கீடு
எனவே, புலிவலம் மணற்போக்கியில் இருந்து 1,200 மீட்டர் தூரம் வரை செல்லும் கொடிங்கால் வடிகால் குடமுருட்டி பாலம் காவிரி ஆறு வரை தூர்வாரப்படவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புலிவலம் மணற்போக்கியில் இருந்து கொடிங்கால் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிக்கு ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிதியின்கீழ் தற்போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
புலிவலம் மணற்போக்கி கொடிங்கால் வடிகால் தூர்வாரும் பணியினை பார்வையிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு வந்தார். அங்கு ஆற்றுப்பாலத்தில் நின்றபடி, வடிகாலில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, வடிகால் கரைகளில் நின்றபடி புலிவலம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உரத்த குரல் எழுப்பி ஸ்டாலினை வரவேற்றனர். அவர்களை பார்த்து கையசைத்த மு.க.ஸ்டாலின், நல்லா இருக்கீங்களா? என கேட்டார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தூர்வாரும் பணியினை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். அப்போது விவசாயிகள் மு.க.ஸ்டாலினை சந்தித்து தூர்வாரும் பணிக்காக நன்றி தெரிவித்து கொண்டனர்.
ஆய்வு முடிந்ததும் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார்.
அதிகாரிகள்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, திருச்சி மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் சந்தீப் சக்சேனா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்லம், ஆற்றுப்பாதுகாப்பு பாசன கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் புறப்பட்டு சென்றார், ஸ்டாலின்
திருச்சி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர், மு.க.ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை 4.25 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார். அங்கு இன்று (சனிக்கிழமை) காலை, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார்.
Related Tags :
Next Story