உவரி அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைப்பு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு


உவரி அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைப்பு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Jun 2021 1:00 AM IST (Updated: 12 Jun 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

உவரி அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திசையன்விளை:
உவரி அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

ஆனந்தவல்லி அம்மன்

நெல்லை மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் பழமைவாய்ந்த ஆனந்தவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி சுப்பிரமணியன் நேற்று அதிகாலை கோவில் நடையை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் மூலவர் ஆனந்தவல்லி அம்மன் கண்ணில் அணிந்து இருந்த கண்மலர் கீழே விழுந்து கிடந்தது. மேலும் அம்மன் சிலையின் கழுத்து பகுதி உடைக்கப்பட்டு துண்டாகி நின்றது. 

அதிர்ச்சி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகிகள் சார்பில் உவரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்மன் சிலையை மர்மநபர்கள் உடைத்து இருப்பது தெரியவந்தது. நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். 

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலையை உடைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story