தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா?


தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா?
x
தினத்தந்தி 12 Jun 2021 1:29 AM IST (Updated: 12 Jun 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டையில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
அரசு அலுவலகம் 
வெம்பக்கோட்டை ஊராட்சியில் விளாமரத்துப்பட்டி, இ.மீனாட்சிபுரம் காமராஜர் காலனி, நேருஜி நகர், செல்லையாபுரம், அக்கரைப்பட்டி, கோமாளிபட்டி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 
மேலும் வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், கால்நடை தலைமை மருத்துவமனை,  வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, புள்ளியல் துறை, சிவகாசி நகராட்சி நீரேற்று நிலையம் உள்பட 21 அரசு அலுவலங்கள் உள்ளன.
தண்ணீர் பற்றாக்குறை 
வெம்பக்கோட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. 
ஊராட்சியை சேர்ந்த அனைத்து பகுதிகளுக்கும் இதனால் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தலைமை நீரேற்று நிலையம் வெம்பக்கோட்டையில் தான் உள்ளது. நிறுத்தப்பட்ட குடிநீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் கோவிந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். 
நடவடிக்கை 
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆதலால் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story