ரூ.200 கோடி மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி


ரூ.200 கோடி மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 12 Jun 2021 5:33 AM GMT (Updated: 12 Jun 2021 5:33 AM GMT)

சென்னை நிறுவனத்தில் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் மும்பை தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

மும்பையில் செயல்படும் ‘ஐ.எல்.எப்.எஸ். டிரான்ஸ்போர்ட்டேசன் நெட்ஒர்க்’ என்ற நிறுவனம் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தியது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், பெரிய அளவில் மாதம்தோறும் சம்பாதிக்கலாம் என்று விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது.அதை நம்பி, சென்னை அண்ணாசாலையில் செயல்படும் ‘63 மூன்ஸ் டெக்னாலஜி’ என்ற நிறுவனம் ரூ.200 கோடி அளவுக்கு மும்பை நிறுவனத்தில் முதலீடு செய்தது.

மும்பை நிறுவனம் அந்த ரூ.200 கோடியையும் மோசடி செய்து மொட்டை அடித்து விட்டதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ்பாபு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தொழில் அதிபருமான ரவிபார்த்தசாரதி என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

அவரது முன்ஜாமீன் மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் ரவிபார்த்தசாரதி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

Next Story